ஷிபு சோரன் - கோப்புப்படம்
ஷிபு சோரன் - கோப்புப்படம்ANI

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்! | Shibu Soren | JMM | Jharkhand

மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராக ஷிபு சோரன் பதவி வகித்துள்ளார்.
Published on

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன் இன்று (ஆக. 4) காலமானார்.

இது குறித்து ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

`மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார். இன்று, எனக்குள் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது’ என்றார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 81 வயதான ஷிபு சோரன் சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு வந்தார்.

அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆக. 4) காலை 8:56 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டதாக சர் கங்கா ராம் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் ஏ.கே. பல்லா தகவல் தெரிவித்தார்.

மூத்த பழங்குடியினத் தலைவரான ஷிபு சோரன், பிஹாரில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாவதற்கு வித்திட்ட இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2000-ல் ஜார்க்கண்ட் மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு, மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பணியாற்றினார்.

ஏழு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளா ஷிபு சோரன், 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மத்திய நிலக்கரி அமைச்சராக பணியாற்றினார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

ஷிபு சோரனின் மகன்களில் ஒருவரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் தற்போது அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in