ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை தனக்கான வாய்ப்புகள் அனைத்தும் திறந்தே இருப்பதாக சம்பாய் சோரன் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி சென்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை தனக்கான வாய்ப்புகள் அனைத்தும் திறந்தே இருப்பதாக சம்பாய் சோரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"பழங்குடியினர், ஏழைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் முயற்சிக்கிறேன். நான் பதவியில் நீடித்தாலும் இல்லாவிட்டாலும் ஜார்க்கண்டின் சிறந்த எதிர்காலத்துக்காக கனவு காணும் மக்கள் பிரச்னைகளை எழுப்பி எப்போதும் மக்களுக்கு சேவையாற்றுவதை எண்ணியிருந்தேன்.
இதனிடையே ஜனவரி 31-ல் முன்னெப்போதும் நிகழாத சம்பவங்கள் அரங்கேறின. ஜார்க்கண்டின் 12-வது முதல்வராக இண்டியா கூட்டணி என்னைத் தேர்வு செய்தது. முதல் நாளிலிருந்து என்னுடையக் கடைசி நாள் (ஜூலை 3) வரை முழு அர்ப்பணிப்புடன் கடமையாற்றினேன். இந்தக் காலகட்டத்தில் மக்கள் நலன் கருதி நிறைய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனிடையே, ஹல் திவாஸுக்கு மறுநாள், என்னுடைய அடுத்த இரு நாள்களுக்கான திட்டங்கள் கட்சித் தலைமையால் ஒத்திவைக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஒன்று தும்காவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்று. மற்றொன்று பிஜிடி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
இதுதொடர்பாக கேட்டதற்கு, கூட்டணிக் கட்சிகளால் ஜூலை 3 அன்று சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுவரை முதல்வராக எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்றார்கள்.
முதல்வரின் திட்டங்களை வேறொருவர் ரத்து செய்யக்கூடிய அளவுக்கு ஜனநாயகத்தில் பெரிய அவமானம் ஏதேனும் இருக்க முடியுமா?. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இருநாள்கள் நான் அமைதி காத்தேன். இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியில் என் தவறு என்ன என்பதைக் கண்டறிய முயற்சித்தேன்.
எனக்குத் துளியளவுகூட அதிகாரப் பேராசை கிடையாது. ஆனால், என் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இந்த இழுக்கை யாரிடம் சொல்வது.
சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தைக் கூட முதல்வர் உரிமை இருந்தபோதிலும்கூட, இந்தக் கூட்டத்தின் நோக்கம், நிகழ்ச்சிநிரல் குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முதல்வர் நாற்காலி மீது மட்டும்தான் விருப்பம். என் வாழ்நாள் முழுக்க கட்சிக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். இருந்தபோதிலும், கட்சியில் நான் ஒரே ஆளே இல்லை என்கிற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இன்னும் நிறைய அவமானங்களை எதிர்கொண்டேன். அவற்றை என்னால் தற்போது குறிப்பிட முடியாது. இதனால்தான், மாற்றுப் பாதையைத் தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.
இன்று முதல் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் வரை எனக்கான அனைத்து வாய்ப்புகள் திறந்தே உள்ளன" என்று சம்பாய் சோரன் குறிப்பிட்டுள்ளார்.