ஹரியாணாவில் பாஜக அரசு கவிழ்கிறதா?

பாஜக அரசுக்கு ஆதரவளித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் தங்களுடைய ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஹரியாணா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த சௌதாலா ஆளுநர் பண்டாரு தாத்தத்ரேயாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவையின் பலம் 90. 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஹரியாணா லோகித் கட்சி 1 இடத்திலும், இந்திய தேசிய லோக் தளம் 1 இடத்திலும் வெற்றி பெற்றன.

இதில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் கடந்த மார்ச் 13-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சுயேச்சை எம்எல்ஏ ரஞ்சித் சௌதாலா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டதால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், சட்டப்பேரவையின் பலம் 88 ஆகக் குறைந்தது. பெரும்பான்மைக்கு 45 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது.

மனோகர் லால் கட்டர் ராஜினாமாவைத் தொடர்ந்து, 6 சுயேச்சைகள் மற்றும் ஹரியாணா லோகித் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரின் ஆதரவைப் பெற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் பாஜகவின் நாயப் சிங் சைனி.

இந்த நிலையில், பாஜக அரசுக்கு ஆதரவளித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏ-க்கள் தங்களுடைய ஆதரவைத் திரும்பப் பெறுவதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்கள். இதனால், சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 43 ஆகக் குறைந்துள்ளது.

பாஜக 40 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதுதவிர இரண்டு சுயேச்சைகள் ஆதரவும், ஹரியாணா லோகித் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கோபால் கண்டாவின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.

சுயேச்சைகள் தங்களுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சியில் ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

பாஜகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற 3 சுயேச்சைகள் காங்கிரஸுக்கு ஆதரவளித்தாலும், பெரும்பான்மைக்கு இன்னும் 13 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, சட்டப்பேரவையில் தற்போது யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த சௌதாலா, தற்போதைய ஹரியாணா அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் பண்டாரு தாத்தத்ரேயாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in