புதிய அமைப்பைத் தொடங்கி அதை வலுப்படுத்தவுள்ளதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜேஎம்எம் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் ஜேஎம்எம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் இவருடைய மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சிக்கும் இவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அண்மையில் நீண்ட பதிவை வெளியிட்ட சம்பாய் சோரன், தான் நிறைய அவமானப்படுத்தப்பட்டதாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை தனக்கு மூன்று வாய்ப்பு திறந்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்டில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்ற சம்பாய் சோரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"நான் மூன்று வாய்ப்புகளைக் குறிப்பிட்டிருந்தேன். ஓய்வு, புதிய அமைப்பு அல்லது நட்புறவு. இதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். நான் தொடங்கியுள்ள புதிய அத்தியாயத்தில் புதிய அமைப்பை வலுப்படுத்துவேன். மாநிலத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வழியில் நண்பர்கள் யாரேனும் வந்தால், அவர்களுடன் இணைந்து பயணிப்பேன். ஒரு வாரத்தில் அனைத்தும் தெளிவாகிவிடும்" என்றார் சம்பாய் சோரன்.
புதிய அமைப்பை வலுப்படுத்தவுள்ளதாகக் கூறியதன் மூலம், சம்பாய் சோரன் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.