ஜார்க்கண்டில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 64.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மனைவி சாக்‌ஷியுடன் வாக்களிக்க வந்த எம்எஸ் தோனி
மனைவி சாக்‌ஷியுடன் வாக்களிக்க வந்த எம்எஸ் தோனிANI
1 min read

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 64.86% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக லோஹர்தகா மாவட்டத்தில் 73.21% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் 63.9% வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் முதற்கட்ட 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அச்சுறுத்தல் நிறைந்தவை எனக் கருதப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் மொத்தம் 638 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் ராஞ்சியில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் சஞ்சய் சேத்தும் ராஞ்சியில் தனது வாக்கை செலுத்தினார். பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் ராஞ்சியில் உள்ள டிஏவி ஜவஹர் வித்யா மந்திரில் வாக்களித்தார்.

ஜார்க்கண்டில் மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார்.

இவை தவிர ராஜஸ்தானில் 7 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிஹாரில் 4 தொகுதிகள், கேரளத்தில் 3 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 2 தொகுதிகள் மற்றும் மேகாலயா, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகத்தில் தலா ஒரு தொகுதி என 10 மாநிலங்களில் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in