
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது.
பிஹாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பாஜக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
பாஜக சார்பில் நேற்று 71 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக 12 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாஜகவில் நேற்று இணைந்த பாடகி மைதிலி தாக்குர் இன்று வெளியிடப்பட்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. பிஹார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் 5 அமைச்சர்கள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்களாக 4 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 30 பெயர்கள் புதிய பெயர்களாக உள்ளன. 27 வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஹாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஏறத்தாழ 36% பேர் உள்ளார்கள். ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறிப்பிடத்தக்க அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அலௌலி, சோன்பர்சா, ராஜ்கிர், ஏக்மா மற்றும் மோர்வா ஆகிய 5 தொகுதிகளுக்கும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. காரணம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்த 5 தொகுதிகளைக் கோரியிருந்தது. இதிலும் அலௌலி தொகுதி ககாரியா மாவட்டத்தில் வருகிறது. சிராக் பாஸ்வானின் சொந்தப் பகுதிக்குள் இது வருவதால், இந்தத் தொகுதி அவருக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சிராக் பாஸ்வான் மற்றும் நிதிஷ் குமார் இடையே இந்தத் தொகுதிகள் குறித்து என்ன பிரச்னை எழும் என்பது அடுத்தடுத்த நாள்களில் தெரியவரும்.
ஐக்கிய ஜனதா தளத்தின் இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதிஷ் குமார் நாளை முதல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார். சமஸ்திபூரில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் நிதிஷ் குமார்.
Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 | JDU | Nitish Kumar | Lok Janashakti Party (Ram Vilas) | Chirag Paswan |