அஸ்ஸாமில் ஜப்பான் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 10 பேர் பலி!

அருகருகே அமைந்துள்ள காம்ரூப், காம்ரூப் (மெட்ரோ), நல்பாரி மற்றும் தரங் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மூளைக் காய்ச்சல் நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமில் ஜப்பான் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 10 பேர் பலி!
ANI
1 min read

அஸ்ஸாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மை மற்றும் தலைமை கண்காணிப்பாளரான மருத்துவர் அச்சுத் சந்திர பைஷ்யா ஏஎன்ஐ ஊடகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பைஷ்யா ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், `கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்தைவிட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுவரை, 44 நோயாளிகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 10 பேர் இறந்துள்ளனர்’ என்றார்.

அருகருகே அமைந்துள்ள காம்ரூப், காம்ரூப் (மெட்ரோ), நல்பாரி மற்றும் திரங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மூளைக் காய்ச்சல் நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அசாமில் 840-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மனிதர்களுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் ஜப்பானீஸ் என்செஃபாலிட்டீஸ் (Japanese encephalitis) வைரஸ் `க்யூலெக்ஸ்’ கொசுக்களிலும், பன்றிகளின் மற்றும் சில நீர்ப் பறவைகளின் உடல்களிலும் வாழக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த நோய் பாதிப்பு பரவாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in