தோல்விகளுக்குப் பொறுப்பேற்று மௌன விரதம் இருக்கிறேன்: பிரஷாந்த் கிஷோர் | Prashant Kishor |

ஜேடியு அரசு பிஹார் மக்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுத்துவிட்டால் அரசியலை விட்டு வெளியேறுகிறேன்...
பிரஷாந்த் கிஷோர் (கோப்புப்படம்)
பிரஷாந்த் கிஷோர் (கோப்புப்படம்)ANI
2 min read

பிஹார் தேர்தல் தோல்விகளுக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு ஒரு நாள் முழுவதும் மௌன விரதம் இருக்கப் போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பிஹார் சட்டமன்ற தேர்தலில் அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது. மொத்தமுள்ள 238 தொகுதிகளில் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக 4 தொகுதிகளில் டெபாஸிட் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்குத் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

“நடந்த தேர்தலில் நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டோம். ஆனால் பிஹார் ஆட்சியை எங்களால் மாற்ற முடியவில்லை. நாங்கள் வேறு எங்கேயோ தவறியிருக்கிறோம் என்று தெரிகிறது. தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மக்களுக்குப் புரிய வைக்கத் தவறிவிட்டேன். எங்கள் கட்சியை நாங்கள் சுயபரிசோதனை செய்கிறோம். மேலும், நான் ஒரு நாள் மௌன விரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளேன்.

எங்கள் முயற்சிகள் தோல்வியடைந்ததற்காக வருந்துகிறேன். நாங்கள் எங்களால் ஆனதை நேர்மையுடன் செய்தோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக் கொள்வதில் எந்தப் பாதகமும் இல்லை. அரசியல் அமைப்பை மாற்றுவதற்காக வந்தோம். எங்களால் அரசைக் கூட மாற்ற முடியவில்லை. ஆனால், அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். எங்கள் முயற்சியில், சிந்தனையில், நாங்கள் விளக்கிய விதத்தில் குறைபாடுகள் இருந்திருக்கலாம். எங்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், அதற்கான பொறுப்பு என்னையே சேரும்.

நாங்கள் இதே ஆற்றலுடன் மீண்டும் செயல்படுவோம். நான் பிஹார் அரசியலை விட்டு வெளியேறுவேன் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. போட்டியில் விலகும் வரை ஒருவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. ஜேடியு 25 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு வெளியேறுவதாகச் சொன்னது பற்றி இப்போது பலரும் பேசுகிறார்கள். நான் உறுதியாக அதைச் செய்வேன். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் பிஹாரின் ஒன்றரை கோடி மக்களுக்கும் ஆளும் ஜேடியு அரசு ரூ. 2 லட்சத்தைக் கொடுக்கட்டும். அப்படித் தந்துவிட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன்.

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல் பிஹார் மக்கள் வாக்குகளை விற்கவில்லை. அவர்கள் காசுக்காகத் தங்கள் எதிர்காலத்தையோ தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையோ விற்பவர்கள் கிடையாது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அரசு வழங்கிய ரூ. 10,000 மற்றும் தருவதாகக் கூறிய ரூ. 2 லட்சத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதில் தேர்தல் ஆணையத்தின் மீது தவறு இருப்பதாகக் கூறும் வாதங்களுக்கு முடிவே இல்லை” என்றார்.

Summary

Jan Suraaj chief Prashant Kishor, in his first reaction after the party's drubbing in the recently-concluded Bihar Assembly polls, took a 'maun upvas' (vow of silence) for "failing to change the government". Kishor, while speaking to the media, took full responsibility for the party's poor performance.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in