
ஜனவரி 15-ல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக புதிய அறிவிப்பு வெளியானதை அடுத்து, அது தொடர்பான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை கடந்த டிச.19-ல் வெளியிடப்பட்டது. இதன்படி ஜனவரி 3 தொடங்கி ஜனவரி 16 வரை, மொத்தம் 8 நாட்களில் பல்வேறு பாடங்களுக்குத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அட்டவணையில், பொங்கல் பண்டிகை நாட்களன்று (ஜன 15 மற்றும் 16) நெட் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதிகளை மாற்றும்படி, மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதினார்கள்.
இந்நிலையில், நேற்று (ஜன.13) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டிருந்த அறிவிக்கையில், `பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 15 ஜனவரி, 2025 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றன.
விண்ணப்பதாரர்களின் நலனுக்காக, 15 ஜனவரி 2025 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16-ல் திட்டமிடப்பட்டிருந்த தேர்வு முன்பு அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி நடைபெறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாகத் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டவை,
`தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்!’ என்றார்.