ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய தேசியப் புலனாய்வு முகமை!
ஜூன் 9-ல் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பேருந்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த திடீர்த் தாக்குதலால் அருகிலிருந்த பள்ளத்தாக்குக்குள் பேருந்து கவிழ்ந்து, பயணிகளில் 9 பேர் மரணமடைந்தனர், 33 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த ஜம்மு - காஷ்மீர் போலீஸார், தீவிரவாதிகளைப் பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் போலீஸாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு முகமை எடுத்துக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். இந்த தாக்குதலின் தீவிரத்தன்மை காரணமாக உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தேசியப் புலனாய்வு முகமை புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் வரும் தேசியப் புலனாய்வு முகமை 2008-ல் நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நிறுவப்பட்ட விசாரணை அமைப்பாகும். மாநிலங்களில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களை சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் விசாரிக்கத் தேசியப் புலனாய்வு முகமைக்கு அதிகாரம் உள்ளது. மேலும் இந்தியாவின் இறையாண்மை, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் நிகழ்வுகளை விசாரிக்கவும் இந்த அமைப்புக்கு முழு அதிகாரம் உள்ளது.
ரியசி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீரின் பிற பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயரதிகாரிகளுடன் கடந்த ஜூன் 16-ல் ஆலோசனை மேற்கொண்டார்.