தோல்வியை ஒப்புக்கொண்ட ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி: 2 இடங்களில் மட்டுமே முன்னிலை

ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இல்திஜா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரைவிட சுமார் 7,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்ட ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி: 2 இடங்களில் மட்டுமே முன்னிலை
1 min read

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி. இதை அடுத்து மக்களின் முடிவை ஏற்பதாக அக்கட்சித் தலைவர் மெஹபூபா முப்தியின் மகளும், வேட்பாளருமான இல்திஜா முப்தி அறிவித்துள்ளார்.

இன்று (அக்.08) காலை 8 மணிக்குத் தொடங்கி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் இண்டியா கூட்டணியின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

அதே நேரம், தனித்துப் போட்டியிட்ட பாஜக 28 இடங்களிலும், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி. அவரது பதிவு பின்வருமாறு:

`மக்கள் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிஜ்பெஹாரா மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பு என்றும் என்னுடன் இருக்கும். இந்தத் தேர்தலுக்காக கடுமையாக உழைத்த மக்கள் ஜனநாயக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்’ என்றார்.

37 வயதான இல்திஜா முப்தி, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுஃப்வாரா- பிஜ்பெஹாரா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 12.30 மணி நிலவரப்படி தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பஷீர் அஹமத் ஷா வீரியைவிட சுமார் 7,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார் இல்திஜா முப்தி.

கடைசியாக 2014-ல் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in