ஜம்மு-காஷ்மீர் பொதுத்தேர்தல்: இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

5 தொகுதிகளில் மட்டும் உடன்பாடு எட்டப்படாததால், இவற்றில் இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் பொதுத்தேர்தல்: இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிப்பு
1 min read

வரும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து அது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 16-ல் அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக பாஜக அறிவித்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டது.

இந்நிலையில் இண்டியா கூட்டணி சார்பில் ஜம்மு-காஷ்மீர் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போகும் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு முடிந்து அதற்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 51 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகளும், சிபிஎம், பேந்தர்ஸ் கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமிருக்கும் 5 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாததால், இவற்றில் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒழுக்கமான முறையில் போட்டி இருக்கும் என ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரிக் ஹமீத் பேட்டியளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் இருக்கும் மற்றொரு முக்கியக் கட்சியான ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்தப் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தாலும் இன்னமும் அதன் தேர்தல் நிலைபாட்டை அறிவிக்கவில்லை.

24 தொகுதிகளில் நடக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஆகஸ்ட் 27) கடைசி நாளாகும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in