
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (79) உடல்நலக் குறைவால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
கடந்த மே மாதம் முதல் சிறுநீரகப் பிரச்னை காரணமாக தில்லியிலுள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராம் மனோஹர் லோஹியாவால் ஈர்க்கப்பட்டு 1965-66-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் சத்யபால் மாலிக். சரண் சிங் தலைமையிலான லோக் தளம் சார்பில் 1980-ல் மாநிலங்களவைக்குத் தேர்வானார். 1984-ல் காங்கிரஸில் இணைந்த இவர் 1986-ல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவையில் இணைந்தார்.
ஆனால், போஃபர்ஸ் ஊழலைத் தொடர்ந்து 1987-ல் கட்சியிலிருந்து விலகினார். 1988-ல் ஜனதா தளமாக மாறிய ஜன் மோர்ச்சா கட்சியை நிறுவியவர்களில் சத்யபால் மாலிக்கும் ஒருவர்.
2004-ல் பாஜகவில் இணைந்த சத்யபால் மாலிக் 2012-ல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் அணியில் இருந்து இவர் செயல்பட்டார்.
2017-ல் இவர் பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2018-ல் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 5, 2019-ல் சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்தார். 2019 அக்டோபரில் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். 9 மாதங்களில் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார். 2022 அக்டோபரில் மேகாலயா ஆளுநராக ஓய்வு பெற்றார் சத்யபால் மாலிக்.
இவர் பிற்காலத்தில் தான் சார்ந்த பாஜகவை விமர்சிக்கவும் தொடங்கினார். 2019 புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகளை இவர் வெளிப்படையாக விமர்சித்தார். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார் சத்யபால் மாலிக். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகளுடனும் இவர் துணை நின்றார்.
அண்மை நாள்களாகவே சத்யபால் மாலிக் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர் தில்லியிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தான், இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் சத்யபால் மாலிக்கின் உயிர் பிரிந்துள்ளது.
Satya Pal Malik | Jammu Kashmir | Governor | BJP