
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தொடர்ச்சியான சந்திப்புகளை அடுத்து, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுவது குறித்த வதந்திகள் தற்போது சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
மேலும், சில ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனும், பிராந்திய பாஜக தலைவருடன் தனித்தனியாக அடுத்தடுத்து அமித்ஷா சந்திப்பை மேற்கொண்டது இந்த வதந்திகளுக்கு வலுசேர்த்துள்ளது.
சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2019 ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டப்பேரவை இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். ஆச்சரியம் அளிக்கும்விதமாக இந்த பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வழக்கமாக, இதுபோன்ற உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பிறகு அது குறித்த செய்தி அறிக்கை பி.ஐ.பி.யில் வெளியிடப்படும்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக, ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் சத் சர்மா மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா ஆகியோரையும் அமித்ஷா சந்தித்தார்.
இந்நிலையில், அனைத்து ஜம்மு காஷ்மீர் ஷியா சங்கத்தின் தலைவர் இம்ரான் ராஸா அன்சாரி, யூனியன் பிரதேசத்தில் உள்ள கள யதார்த்தங்களைப் பற்றி விவாதிக்க இன்று (ஆக. 4) அமித்ஷாவை சந்தித்தார்.
புது தில்லியின் அதிகார மையங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற பரபரப்பான சந்திப்புகள், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.