ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 5 தொகுதிகளில் இரு கட்சிகளும் நட்பு ரீதியாக எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.
ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அனந்தநாகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே ஐந்து உத்தரவாதங்களை அளித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும்.
பெண் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு.
புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 11 கிலோ அரிசி, கோதுமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்படும்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றார்கள்.