
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர்களிடம் வங்கதேசம் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார் ஜெய்சங்கர்.
இந்தக் கூட்டத்தில், வங்கதேசத்தில் நடந்து வரும் பிரச்சனையின் பின்னணி குறித்தும், தற்போது அங்கு நிலவி வரும் சூழல் குறித்தும் விளக்கினார் ஜெய்சங்கர். மேலும் எப்படி ஷேக் ஹசீனா இந்தியாவை வந்தடைந்தார் என்பது குறித்தும் விளக்கமளித்தார் ஜெய்சங்கர்.
`ஷேக் ஹசீனா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று முடிவெடுக்க மத்திய அரசு அவருக்குத் தகுந்த கால அவகாசத்தைத் தர முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வங்கதேச ராணுவத்துடன் தொடர்பில் உள்ளது. சரியான நேரத்தில் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்’ என்று பேசினார் ஜெய்சங்கர்.
இந்தக் கூட்டத்தில், வங்கதேச விவகாரத்தில் இந்திய அரசிடம் இருக்கும் நீண்ட கால மற்றும் குறுகிய கால வியூகங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், `இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் முன்னேற்றங்கள் ஆராயப்படும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, `வங்கதேச விவகாரத்தில் வெளிநாடுகளின் தொடர்பு உள்ளதா’ என்று கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி. இதற்கு, `அனைத்துவித கோணங்களும் ஆராயப்படும்’ என்றார் ஜெய்சங்கர்.
`20,000 இந்தியர்கள் வங்கதேசத்தில் உள்ளனர். இதுவரை 8,000 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் இந்தியத் தூதரகம் அங்கிருக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது’ என்ற தகவலை கூட்டத்தில் தெரிவித்தார் ஜெய்சங்கர்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக பிற்பகல் 3.30-க்கு மக்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.