ஜெய் பாலஸ்தீன்: நாடாளுமன்றத்தில் சர்ச்சையான அசாதுதீன் ஓவைசியின் முழக்கம்

அங்கே பல மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். மகாத்மா காந்தி பாலஸ்தீனைப் பற்றிப் பல விஷயங்கள் கூறியுள்ளார்
ஜெய் பாலஸ்தீன்: நாடாளுமன்றத்தில் சர்ச்சையான அசாதுதீன் ஓவைசியின் முழக்கம்
ANI

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்றத்தில் ஜெய் பாலஸ்தீன் என முழங்கினார்.

புதிதாகத் தேர்வாகியுள்ள மக்களவை உறுப்பினர்கள் இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் எம்.பி.யாகப் பதவியேற்று வருகின்றனர். இந்நிலையில் பதவி பிரமாணம் எடுத்ததும் `ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன்’ என முழங்கினார் ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி.

மக்களவைக்குள் ஓவைசி மேற்கொண்ட இந்த முழக்கத்துக்கு மத்திய அமைச்சரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவருமான கிஷண் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய் பாலஸ்தீன் முழக்கம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ஓவைசியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, `எல்லோரும் நிறைய விஷயங்களைச் சொல்கிறார்கள். நான் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீன் என்றேன், இது எப்படி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகும்? அங்கே பல மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். மகாத்மா காந்தி பாலஸ்தீனைப் பற்றிப் பல விஷயங்கள் கூறியுள்ளார். அதை யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம்’ என்றார்.

18-வது மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் தொகுதியில் பாஜகவின் மாதவி லதாவை 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எம்.பி.யாகத் தேர்வானார் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in