சிஏஏ அமல்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, சிஏஏ-வுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பாஜக அறிவித்திருந்தது. மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் தற்போது அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 250 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தாக்கல் செய்த மனுவே முதன்மையானது. இந்தச் சட்டம் அமலானதைத் தொடர்ந்து, இதற்குத் தடை விதிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை என்று கூறி இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதிலிருந்து தப்பியது. நான்கரை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்காக அரசு காத்திருக்க வேண்டும். ஒருவேளை குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்கிற உச்ச நீதிமன்றம் வந்தால், இந்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை இழக்க நேரிடும். அது அசாதாரண நிலையை உருவாக்கும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் அதன் விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பதே சிறந்த முடிவாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in