
இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ சார்பில் புவிக் கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது போன்ற பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 175.5 கிலோ எடை கொண்டது.
இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு - ரிஃபெளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யூவி டோசிமீட்டர் ஆகிய சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான ஆறரை மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.47 மணிக்குத் தொடங்கியது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இஓஎஸ்-08 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.