காஸா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு! | Gaza | Israel |
காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அல்-சிசி தலைமை வகிக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கியப் பங்காற்றி வருகிறார். காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக 21 அம்சங்கள் கொண்ட திட்டங்களை டிரம்ப் முன்வைத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 48 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள்.
காஸாவில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக எகிப்தில் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபடா அல்-சிசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை வகிக்கவுள்ளார்கள். உச்சி மாநாட்டில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸாவில் போரை நிறுத்தி, மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டி, பிராந்தியப் பாதுகாப்புக்கான புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்க உச்சி மாநாடு முனைவதாக எகிப்து தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படுகிறார். உள்நாட்டு நேரப்படி, திங்கள்கிழமை காலை இஸ்ரேல் சென்றடைகிறார். அங்கு பிணைக் கைதிகளின் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடவுள்ளார் டிரம்ப். பிறகு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரையாற்றுகிறார். இதை முடித்துக்கொண்டு காஸா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து செல்கிறார்.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல்-சிசி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடைசி நேர அழைப்பாக சனிக்கிழமை அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்தத் தகவலானது பிரதமர் அலுவலகத்தால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஒருவேளை அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இதில் பங்கேற்கும் பட்சத்தில் அதிபர் டிரம்பைச் சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகும். மேலும், பாலஸ்தீனத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஆதரவை இந்தியா வெளிப்படுத்தியது போலவும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக, திங்கள்கிழமை காலை முதல் இரு தரப்பும் பரஸ்பரம் பிணைக் கைதிகளை விடுவிக்கவுள்ளார்கள்.
அடுத்ததாக கடந்த ஜனவரி - பிப்ரவரியில் இஸ்ரேலைச் சேர்ந்த 25 பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகள் 8 பேருடைய உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இஸ்ரேல் தரப்பில் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் 21 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார்.
Israel | Gaza | Hamas | Israel Gaza Peace Plan | Israel Gaza | Egypt | Egypt Summit | Narendra Modi | PM Modi |