
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை (பிப்.18) ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி தலைமையில் முதல்முறையாக தேர்வுக்குழு கூடுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 15 மே 2022-ல் பொறுப்பேற்றார் ராஜீவ் குமார். நாளை (பிப்.18) அவர் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று (பிப்.17) தில்லியில் கூடுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருடன், இரு தேர்தல் ஆணையர்கள் பதவி வகிப்பார்கள். அந்த வகையில் தேர்தல் ஆணையர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் கியானேஷ் குமாரும், சுக்பீர் சிங் சந்துவும் தற்போது பொறுப்பு வகிக்கிறார்கள்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வுபெறும்போது, இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதே முன்பு நடைமுறையாக இருந்தது. ஆனால் கடந்த 2023-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு முக்கிய தீர்ப்புக்குப் பிறகு, தேர்தல் ஆணையர்களை நியமிக்க புதிய சட்டத்தை இயற்றியது நாடாளுமன்றம்.
இதன் அடிப்படையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழு இன்று (பிப்.17) முதல்முறையாகக் கூடுகிறது.
தற்போதைய தேர்தல் ஆணையர்கள் கியானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் வேறு மூன்று நபர்களின் பெயரையும் சேர்த்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு இந்த தேர்வுக் குழு பரிசீலிக்கவுள்ளது. இருந்தாலும், கியானேஷ் குமாருக்கு புதிய தலைமை தேர்தல் ஆணையராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.