காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல நூற்றாண்டு காலமாக நடைபெற்றுவரும் குங்குமப்பூ சாகுபடி சமீப காலமாக காலநிலை மாற்றம் மற்றும் பிற காரணங்களால் சரிவைச் சந்தித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாம்போர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் குங்குமப்பூ உலகப்புகழ் பெற்றதாகும். ஒரு பயிர் என்பதைத் தாண்டி, காஷ்மீரின் பாரம்பரியச் சின்னங்களுள் குங்குமப்பூ மிகவும் முக்கியமானது. அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு வருமானம் ஏற்படுத்தித்தரும் பயிர்களில் பிரதானமானது குங்குமப்பூ.
உலகளவிலான குங்குமப்பூ உற்பத்தியில் ஈரானைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. மேலும் ஈரான், ஆஃப்கனிஸ்தான் நாடுகளைவிட இந்தியாவின் காஷ்மீரில் சாகுபடி செய்யப்படும் குங்குமப்பூ தரத்தில் சிறந்ததாகும். ஆனாலும் கடந்த சில வருடங்களாக காஷ்மீரின் குங்குமப்பூ உற்பத்தி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 17 டன் குங்குமப்பூ சாகுபடி காஷ்மீரில் நடந்துவந்த வேளையில், தற்போது ஆண்டுக்கு 10 முதல் 12 டன் குங்குமப்பூ சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது.
காலநிலை மாற்றத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்படும் எதிர்பாராத மழையும், அதிகரிக்கும் வெயிலும் குங்குமப்பூ சாகுபடியை பாதித்துள்ளன. அது மட்டுமல்லாமல், குங்குமப்பூ தோட்டங்களுக்கு அருகே இருக்கும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் தூசியும் குங்குமப்பூ செடிகளின் உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
குங்குமப்பூ சாகுபடியின் சரிவு, காஷ்மீர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. ஏனென்றால் குங்குமப்பூ சாகுபடியில் ஈடுபடும் சுமார் 99 சதவீத விவசாயிகள் இதை மட்டுமே தங்களது வருமானத்துக்கான வழியாக நம்பியுள்ளனர்.