வேலைவாய்ப்பை வழங்குவது முஸ்லிம் லீக் திட்டமா?: பிரதமருக்கு கார்கே பதில்

"சொல்வதற்குத் திட்டங்கள் எதுவும் இல்லாததால், எப்போதும் காங்கிரஸையும், எதிர்க்கட்சியையும் விமர்சித்து வருகிறார் மோடி."
வேலைவாய்ப்பை வழங்குவது முஸ்லிம் லீக் திட்டமா?: பிரதமருக்கு கார்கே பதில்

வேலைவாய்ப்பை வழங்குவதும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதும் முஸ்லிம் லீக் திட்டமாக என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விமர்சித்துப் பேசி வரும் பிரதமர் மோடி, இதை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கையைப்போல இருப்பதாகக் கூறி வந்தார். இதனிடையே, பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

பிரதமரின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது:

"அனைத்துப் பெண்களுக்கும் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் கொடுப்பது முஸ்லிம் லீக்கின் திட்டமா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும், பயிற்சியளிப்பதும், பயிற்சிக்காக ரூ. 1 லட்சம் வழங்குவதும் முஸ்லிம் லீக் திட்டமா? விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளோம். இது முஸ்லிம் லீக் திட்டமா? காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதியளித்துள்ளோம். இது முஸ்லிம் லீக் திட்டமா?

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், தலித்துகள் என அனைத்துத் தரப்புக்கும் 25 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாதவர்கள்தான் இதுபோன்ற பேச்சுகளைப் பேசுவார்கள். உறுதியான திட்டங்கள் ஏதேனும் செய்திருந்தால் அதைப் பற்றி அவரால் பேச முடியும். 100 நாள் வேலைத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, கட்டாய கல்வி, தகவலறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற சுகாதாரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து நாங்கள் பேசுவோம்.

சொல்வதற்கு எதுவும் இல்லாததால், எப்போதும் காங்கிரஸையும், எதிர்க்கட்சியையும் விமர்சித்து வருகிறார். இண்டியா கூட்டணியில் எதுவும் இல்லை, தலைவர் இல்லை என்றெல்லாம் பிரதமர் பேசுகிறார். கூட்டணியில் தலைவர் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்படுவதில்லை" என்றார் கார்கே.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in