
சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிரத்தின் காபந்து முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, புதிய அரசில் துணை முதல்வர் பதவியை வகிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பர் 5-ல் தெற்கு மும்பையில் அமைந்துள்ள ஆஸாத் மைதானத்தில், மஹாராஷ்டிரத்தின் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிரத்தின் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஒட்டி, தற்போது காபந்து முதல்வராக உள்ள சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகப் பதவியை வகிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவார் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வர் உள்ளிட்ட 42 அமைச்சர்கள் வரை பதவியில் இருக்கலாம். மஹாராஷ்டிர சட்டப்பேரவையில் 132 இடங்களை வைத்திருக்கும் பாஜகவுக்கு 20-22 அமைச்சரவை இடங்களும், 57 இடங்களை வைத்திருக்கும் சிவசேனாவுக்கு 10-12 அமைச்சரவை இடங்களும், 41 இடங்களை வைத்திருக்கும் தேசியவாத காங்கிரஸுக்கு 8-10 அமைச்சரவை இடங்களும் கிடைக்கும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஓரிரு நாட்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தானேவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நாளை (டிச.4) காலை 10 மணி அளவில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக தேர்தெடுக்கப்படவுள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.