மணிப்பூரில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரம்?

மாநிலத்தின் நலனுக்காக, தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை கட்டடம்
மணிப்பூர் மாநில சட்டப்பேரவை கட்டடம்ANI
1 min read

மணிப்பூரை சேர்ந்த 23 பாஜக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நேற்று (மே 30) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில், `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அமைப்பதற்காகப் பணியாற்றும் நலனுக்காக, தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்கத் தீர்மானித்துள்ளதாக’ குறிப்பிடப்பட்டிருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. முன்னதாக மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே கடந்த 3 மே 2023-ல் தொடங்கிய மோதலில் இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

சட்ட ஒழுங்கு பிரச்னையை தடுக்கத் தவறியதாக, முதல்வர் பிரேன் சிங்கிற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் சட்டப்பேரவையில் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில், பாஜகவுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 7 பேர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இவர்களில் ஒருவர்கூட நேற்று (மே 30) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, முன்னாள் முதல்வர் பிரேன் சிங் மற்றும் சபாநாயகர் சத்யபிரதா சிங் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பாஜக எம்.எல்.ஏ.க்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில், `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதைக் காணவேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விருப்பத்தின் அடிப்படையில், ஒற்றுமையுடனும் தன்னலமற்ற வகையிலும் அதை அடைவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். மாநிலத்தின் நலனுக்காகவும், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொலைநோக்குப் பார்வைக்காகவும், தனிப்பட்ட லட்சியங்களை ஒதுக்கி வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் பல்லாவை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க தங்களுக்கு 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்தனர்.

பாஜக எம்.எல்.ஏ.க்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுத்தடுத்த நகர்வுகளால், மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in