
இ-ஆதார் வழியாக ஆதார் எண் சரி பார்த்தல் நடைமுறை, தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐஆர்சிடிசி கணக்கை பயன்படுத்தி ரயில்களில் இணைய வழியாக தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய, சம்மந்தப்பட்ட பயனர்களின் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை:
1) ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருக்கும் நபர்கள், பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி கணக்கிற்குள் (Login) நுழையவேண்டும்.
2) இதைத் தொடர்ந்து, எனது கணக்கு (My Account) என்பதை தேர்வு செய்யவேண்டும்.
3) அதில், பயனர் அங்கீகாரம் (Authenticate User) என்பதை தேர்வு செய்து, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.
4) அதன்பிறகு, ஓடிபி எண்ணை பெற்று (ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுச் செய்தியாக அனுப்பப்படும்), அதற்கான இடத்தில் அதைப் பதிவிடவேண்டும்.
5) ஆதார் எண், அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், அதில் பெறப்பட்ட ஓடிபி என அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், பயனர் விவரங்களுடன் ஆதார் எண் அங்கீகரிப்பட்டது (profile details authenticated with aadhaar) என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும்.
இணைய வழி தட்கல் பயணச்சீட்டு முன்பதிவை மேற்கொள்ள தானியங்கி கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, இந்த இ-ஆதார் சரி பார்த்தல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.