
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் தான் நடித்த எமர்ஜென்சி படத்தைப் பார்க்க வருமாறு பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்.
தன்னுடைய சொந்த இயக்கத்தில், பிரியங்கா காந்தியின் பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் எமர்ஜென்சி படத்தில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத். இந்தப் படம் உலகமெங்கும் வரும் ஜனவரி 17-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாகப் பேசியுள்ள கங்கனா ரனாவத், `பிரியங்கா காந்தியை நான் நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். நீங்கள் எமர்ஜென்சியைப் பார்க்கவேண்டும் என்பதை முதலில் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு, சரி (நான்) அதைப் பார்க்கக்கூடும் என்று மிகவும் கனிவுடன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நிச்சயமாக உங்களுக்குப் அது பிடிக்கும் என்றேன்’.
மேலும் பேசிய கங்கனா, `இது மிகவும் தீவிரமான விஷயம் என்று நான் நம்புகிறேன். கண்ணியமான முறையில் இந்திரா காந்தியை சித்தரிப்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டேன்.
என்னுடைய ஆய்வின்போது கணவர், நண்பர்கள் ஆகியோருடன் இருந்த உறவு தொடர்பான அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய தெரிந்துகொண்டேன். ஒரு நபருக்கென ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்’ என்றார்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துச் சித்தரிக்கும் இந்தப் படத்தில் அனுபம் கெர், மிலிந் சோமன், ஸ்ரேயாஸ் டல்படே, மஹிமா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.