ஹிண்டன்பர்க் அறிக்கை குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மீண்டும் ஒரு அறிக்கை வாயிலாக விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தாவல் புச். அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:
`ஐஐஎம் அஹமதாபாதின் முன்னாள் மாணவரான மாதபி புச், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கி மற்றும் நிதி சேவைத் துறைகளில் அனுபவம் கொண்டவர். 2011-ல் இருந்து 2017 மார்ச் வரை சிங்கப்பூரில் உள்ள தனியார் பங்கு முதலீடு நிறுவனத்தில் முதலில் பணியாளராகவும், பிறகு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
ஐஐடி தில்லியின் முன்னாள் மாணவரான தாவல் புச் 35 வருடங்கள் இந்தியாவிலும், பிறகு வெளிநாடுகளிலும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 2010 முதல் 2019 வரை லண்டனிலும், சிங்கப்பூரிலும் வசித்தபடி யூனிலிவர் நிறுவனத்தில் பணியாற்றினார் தாவல் புச்.
இந்த நீண்ட காலகட்டத்தில் மாதபியும், தாவலும் அவர்களின் சம்பளம், போனஸ், பங்கு முதலீடுகள் ஆகியவற்றை சேமித்து வந்தனர். ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்படும் முதலீடு 2015-ல் அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோது மேற்கொள்ளப்பட்டது. அதாவது 2017-ல் செபியின் முழு நேர உறுப்பினராக மாதபி சேருவதற்கு 2 வருடங்களுக்கு முன்பே அந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டது.
தாவலின் பள்ளிக்கால நண்பரும், ஐஐடி தில்லியில் உடன் படித்தவரும், சிட்டி பாங்க் ஜெ.பி. மார்கன் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்தவரும், முதலீடு துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரும், இந்த குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீடு அதிகாரியான அனில் அஹூஜா மட்டுமே, 2015-ல் புச் தம்பதியினர் இந்த முதலீட்டை மேற்கொண்டதற்கான காரணகர்த்தா.
2018-ல் இந்த முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீடு அதிகாரி பதவியில் இருந்து அனில் அஹூஜா ராஜினாமா செய்துவிட்டாலும், நாங்கள் (புச் தம்பதியினர்) செய்த முதலீட்டைத் திரும்பப் பெறவில்லை. எந்த ஒரு காலகட்டத்திலும், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், பாண்ட், ஈக்விட்டி போன்றவற்றில் நாங்கள் (புச் தம்பதியினர்) முதலீடு செய்யவில்லை.
2019-ல் யூனிலிவர் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதும், பிளாக் ஸ்டோன் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தின் மூத்த ஆலோசகராகத் தன் நீண்ட அனுபவத்தின் காரணமாகவே தாவல் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் இந்தத் தகவல் பொது வெளியில் இருந்து வருகிறது. செபியின் தலைவராக 2022-ல் மாதபி நியமிக்கப்படுவதற்கு முன்பே இந்தப் பணியில் சேர்ந்துவிட்டார் தாவல். மேலும் பிளாக் ஸ்டோன் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் தாவலுக்கு எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக செபி 300-க்கும் மேற்பட்ட சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. இவை அனைத்துக்கும் செபியின் நிர்வாகக் குழு (செபி தலைவர் அல்ல) ஒப்புதல் அளிக்கிறது. செபியின் அனைத்துவித விதிமுறைகளுக்கும் அதன் நிர்வாகக் குழுதான் (தலைவர் அல்ல) ஒப்புதல் அளிக்கிறது.
மாதபி சிங்கப்பூரில் இருந்தபோது, இந்தியாவில் ஒன்று, சிங்கப்பூரில் ஒன்று என புதிதாக தொடங்கப்பட்ட இரண்டு ஆலோசனை நிறுவனங்களும் அவற்றில் மாதபி கொண்டிருந்த பங்குகளும் குறித்து செபியில் முழு நேர உறுப்பினராக சேரும்போதே தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஈடுபட்ட எண்ணற்ற விதிமீறல்களை ஒட்டி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நோட்டீஸுக்குப் பதிலளிக்காமல் செபியின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையிலும், செபி தலைவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’.