
ஏணியின் உதவியுடன் சுவர் ஏறி குதித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழைந்த மர்ம நபரிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இன்று (ஆக. 22) காலை 6:30 மணியளவில் ரயில் பவன் அருகாமையில் அமைந்திருந்த சுவரில் ஏறிய மர்ம நபர், புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கருடா வாயிலை அடைந்துள்ளார். வளாகத்திற்குள் அப்போது இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஊடுருவிய அந்த மர்ம நபர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், குஜராத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்கிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றியதாகவும் செய்தியில் கூறப்படுகிறது.
ஊடக செய்திகள் மூலம் காவல்துறைக்கு இந்த சம்பவம் குறித்துத் தகவல் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர் தங்களது விசாரணையை முடித்த பிறகே, கூடுதல் விசாரணைக்காக அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு, சி.ஐ.எஸ்.எஃப்., ஐ.பி. உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு மீறல் நடந்தபோது அங்கே எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை.