உளவுத்துறை எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மூடல்!
ANI

உளவுத்துறை எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மூடல்!

பள்ளத்தாக்கில் உள்ள ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது.
Published on

கடந்த வாரம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ வாய்ப்புள்ளதாக உளவு நிறுவனங்கள் அளித்த எச்சரிக்கையை அடுத்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு மூடியுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வரும் சில தீவிரவாத ஸ்லீப்பர் செல்கள் செயல்படத் தொடங்கியுள்ளதையும், அடுத்தகட்ட தாக்குதலைத் தொடங்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் உளவுத்துறையின் தொலைபேசி இடைமறிப்பு நடைவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

`சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்.22-ல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைக் கருத்தில்கொண்டு, வரும் நாட்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் அல்லாத நபர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் மற்றும் சகோதர புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன’ என்று இந்தியா டுடேவுக்குக் கிடைத்த உளவுத்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) உளவு அமைப்பு, உள்ளூர் மக்கள் அல்லாத பிறர், சிஐடி அதிகாரிகள், காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மிகவும் குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் இந்த தாக்குதல்களை அரங்கேற்ற இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதக் குழுக்களின் வீடுகள் அழிக்கப்பட்டதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காஷ்மீர் முழுவதும் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்குதலைத் திட்டமிட்டுள்ளதாக தொடர்ச்சியாக வெளியாகும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பள்ளத்தாக்கில் உள்ள ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in