
மும்பை கடற்படைத் தளத்தில் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் நேற்று (ஜூலை 21) தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ விபத்துக்குப் பிறகு மாலுமி ஒருவரைக் காணவில்லை எனவும், மீட்புக் குழு அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து குறித்து இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு:
`மும்பை கடற்படை தளத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் நேற்று மாலை திடீரெனத் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஜூலை 22 காலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து கப்பலில் எஞ்சிய தீ அபாயத்தை மதிப்பிடுவதற்காக சுத்திகரிப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தீ விபத்தால் போர்க்கப்பல் ஒரு பக்கம் சாய்ந்துள்ளது. எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலை அதன் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. ஒரே ஒரு இளநிலை மாலுமி தவிர கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக உள்ளனர். மாலுமியைத் தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’.
5300 டன் எடை கொண்ட பிரம்மபுத்திரா போர்க்கப்பல் 2000-ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மபுத்திரா வகையறா போர்க்கப்பல்களைச் சேர்ந்த முதல் போர்க்கப்பல் இதுவாகும். 40 அதிகாரிகள், 330 மாலுமிகள் கொண்ட குழு இந்தப் போர்க்கப்பலை இயக்கி வந்தது.
இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் சீட்டக் ஹெலிகாப்டர்களை அவசர காலத்தில் இந்தப் போர்க்கப்பலில் தரையிறக்க முடியும். மேலும் கடற் போரைத் திறம்படக் கையாளும் வகையில் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் டார்பிடோ லாஞ்சர்கள் போன்ற வசதிகள் இந்தக் கப்பலில் இருந்தன.