மனிதாபிமானமற்ற செயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மனிதாபிமானமற்ற செயல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உறைவிட உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன் கீழ் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
Published on

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட சம்பவத்தை மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள தங்கள் வீடுகளை, பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் பூல்டோசர்களை வைத்து இடித்துவிட்டதாகக் கூறி வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உள்ளிட்டோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சட்டவிரோதமான முறையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறி புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்கள். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் பூய்யான் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு இன்று (ஏப்ரல் 1) நடைபெற்றது.

அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், `இந்த வழக்குகள் எங்களின் மனசாட்சியை உலுக்குகின்றன. இந்த வகையில் இடிப்புப் பணிகளை மேற்கொண்டது சட்டப்பூர்வ அமைப்புகளின் உணர்வின்மையைக் காட்டுகிறது. இது மனிதாபிமானமற்ற செயல் என்பது மட்டுமல்லாமல் சட்டவிரோதமானதும்கூட.

அதிகாரிகள், மிக முக்கியமாக மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், உறைவிட உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன் கீழ் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்’ என்றனர்.

இதைத் தொடர்ந்து, புல்டோசர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in