
பிரபல தொழிலதிபரும் கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர் இங்கிலாந்தில் மாரடைப்பால் காலமானார்.
சோனா குழுமத்தின் நிறுவனர் சுரிந்தர் கபூரின் மகன், சஞ்சய் கபூர். 2003-ல் தந்தையின் நிறுவனத்தில் இணைந்த சஞ்சய் கபூர், பிறகு சோனா காம்ஸ்டார் நிறுவனத்தின் தலைவரானார்.
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூரின் 2-வது மனைவி. இவர்களுடைய திருமணம் கடந்த 2003-ல் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு சமைரா என்ற மகளும் கியான் என்ற மகனும் உள்ளார்கள். எனினும் கடந்த 2016-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
ஓராண்டுக்குப் பிறகு, பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் கபூர் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அஸாரியஸ் என்ற மகன் உண்டு. பிரியா சச்தேவுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகள் ஒருவரும் உள்ளார். இவ்விரு திருமணத்துக்கு முன்பு நந்திதா மஹ்தானி என்ற புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்திருந்தார் சஞ்சய் கபூர். 2000-ல் இருவரும் பிரிந்தார்கள்.
லண்டனில் சஞ்சய் கபூர், போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பூச்சி ஒன்றை விழுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பிறகு மாரடைப்பால் காலமானதாக அறியப்படுகிறது. சஞ்சய் கபூரின் தொழில் ஆலோசகர் சுஹேல் சேத் சஞ்சய் கபூர், உயிரிழப்பை எக்ஸ் தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
சஞ்சய் கபூர் உயிரிழப்பதற்கு முன் அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.