
மத்திய அரசின் வருடாந்திர தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பில் (ஸ்வச் சர்வேக்ஷன்), மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை சூரத்தும் (குஜராத்) மற்றும் 3-வது இடத்தை நவி மும்பையும் (மஹாராஷ்டிரம்) பிடித்துள்ளன.
புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், 2024–25-ம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், `தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் (SBM-U)’ திட்டத்தின் கீழ், தூய்மையைப் பேணுவதில் சீரிய முயற்சிகளை மேற்கொண்ட நகரங்கள் மற்றும் நகர்ப்புற அமைப்புகள் ஆகியவை கௌரவிக்கப்பட்டன.
இந்தூர் நகரத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் அங்கீகாரத்திற்கு, மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுக்கும் புதுமையான நடவடிக்கைகள் மற்றும் குடிமக்களின் தீவிர ஈடுபாடு ஆகியவை காரணிகளாக கூறப்படுகின்றன. படிப்படியாக குப்பைகளை குறைக்கும் கொள்கையை ஊக்குவிப்பதுடன், குடிமக்களுக்கு இடையே தூய்மை கலாச்சாரத்தை இந்தூர் மாநகநாட்சி வளர்த்தெடுத்தும் வருகிறது.
ஸ்வச் சர்வேக்ஷன் 2024–25 விருதுகளில் இந்தூர் கௌரவிக்கப்படும் என்றும், முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நம்பிக்கை தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, இந்தூருக்கு முதலிடத்திற்கான விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி, தற்போது அது அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்வச் சர்வேக்ஷன் என்பது மத்திய அரசால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பாகும். கழிவு மேலாண்மை, சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் குடிமக்கள் பங்கேற்பு போன்ற அளவீடுகளின் அடிப்படையில் இந்திய நகரங்கள் மதிப்பிடுகின்றன.