

இண்டிகோ விமான சேவைகள் அடுத்தடுத்து பல நகரங்களில் ரத்து செய்யப்பட்டு வருவதால் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் நாளொன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் நிலையில், கடந்த டிசம்பர் 2 அன்று சுமார் 1,400 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில், 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இன்றும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இண்டிகோ நிறுவனத்தின் விமானங்களில், பெங்களூருவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள், தில்லியில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள், கொல்கத்தாவில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் என சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் குடும்பங்களுடன் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விமானிகளில் பணியாற்றுபவர்களுக்கு உரிய ஓய்வு நேரத்தை வழங்கும் வகையில், விமான கடமை நேர வரம்புகள் இரண்டாம் கட்ட விதிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியது. இந்தப் புதிய விதிமுறையின்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உட்பட நாளொன்றுக்கு 8 மணிநேரம், வாரத்துக்கு 35 மணிநேரம், மாதத்துக்கு 125 மணிநேரம், ஆண்டுக்கு 1,000 மணிநேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதனால் விமானங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் மட்டும் இண்டிகோ நிறுவனத்தின் 1,232 விமானங்கள் ரத்து செய்துள்ளதாக தகவல் தெரியவருகிறது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண 24 மணிநேரமும் பணிபுரிந்து வருவதாகவும், விரைவில் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
Passengers at all airports in the country have been affected as IndiGo flight services have been cancelled in several cities.