ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தவிர்த்து, விண்வெளித் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்தாண்டு செப்டம்பரில் குழு அமைக்கப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான பரிந்துரைகள் அடங்கிய 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்தது.
இந்தப் பரிந்துரைகளை ஒருமனதாக ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் அளிக்கப்பட்ட ஒப்புதல் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்வணவ் விளக்கமளித்துள்ளார்.
"ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இந்த முன்மொழிவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை முன்னெடுத்துச் சென்று செயல்படுத்துவதற்காகக் குழு அமைக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முன்னெடுப்பை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. உயர்நிலைக் குழுவுடன் நடைபெற்ற உரையாடல்களில் அவர்கள் தங்களுடையக் கருத்துகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் வைத்துள்ளார்கள்" என்றார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சந்திரயான் திட்டத்தை விரிவுபடுத்த சந்திரயான்-4 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.