1952-ல் இந்தியாவில் அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசால் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சிவிங்கிப் புலி திட்டம் இன்றுடன் (செப்.17) இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது.
கடந்த செப்.17 2022-ல் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை ஒட்டி நமீபியா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 8 சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிடப்பட்டன. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2023-ல் தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில் சிவிங்கிப் புலி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவு செய்வதை ஒட்டி தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார் மத்திய சுற்றச்சூழல், வன அமைச்சர் பூபேந்தர் யாதவ். அவர் பதிவிட்டவை பின்வருமாறு:
`பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்ட இந்த சிவிங்கிப் புலி திட்டம், வனவிலங்குகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையைக் குறிக்கும் உலகளாவிய ஒரு முன்னோடி முயற்சியாகும். இது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. புதிய வாழ்விடங்களில் அனுசரித்து நடப்பது முதல், குட்டிகள் உயிர்வாழ்வது வரை பல்வேறு சவால்கள் சமாளிக்கப்பட்டன.
சிவிங்கிப் புலிக்குட்டிகள் இயற்கைச் சூழலில் வாழ்ந்து வருவதைத் தற்போது உலகம் பார்த்து வரும் வேளையில், இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரின் அர்ப்பணிப்பையும் நெகிழ்ச்சியுடன் நாங்கள் கொண்டாடுகிறோம். இது நமது சுற்றுச்சூழலில் சமநிலையை மீட்டெடுப்பதற்கான ஆரம்பமாகும்’ என்றார்.
தற்போது குனோ பல்பூர் தேசியப் பூங்காவில் 12 சிவிங்கிப் புலிகளும், 12 சிவிங்கிப் புலிக்குட்டிகளும் உள்ளன.