
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மொழியில் பேசுவதை பிற மொழிகளில் கேட்கும் வகையிலான மொழிபெயர்ப்பு வசதிகளை நாட்டிலேயே முதல் சட்டப்பேரவையாக அறிமுகப்படுத்தவுள்ளது உ.பி. மாநில சட்டப்பேரவை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஹிந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, உருது, சமஸ்கிருதம் ஆகிய 16 மொழிகளில் எந்த ஒரு மொழியில் ஒருவர் உரையாற்றினாலும், மொழிபெயர்ப்பு வசதியை உபயோகித்து உடனுக்குடன் அந்த உரையை பிற 15 மொழிகளில் கேட்கலாம்.
ஆனால் இதுவரை இந்த வசதி நாடாளுமன்றத்தில் மட்டுமே இருந்து வந்தது. எந்த ஒரு மாநில சட்டப்பேரவையிலும் இந்த வசதி இல்லை. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக உ.பி. மாநில சட்டப்பேரவையில் மொழிபெயர்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மொழிபெயர்ப்பு வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என உ.பி. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவாதி, பிரஜ், போஜ்புரி, புந்தேலி ஆகிய வட்டார மொழிகளிலும், கூடுதலாக ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது உ.பி. சட்டப்பேரவையின் அலுவல் மொழியாக ஹிந்தி உள்ளது. தங்களின் வட்டார மொழிகளில் பேசுவது மூலம் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெருமிதமாக உணர்வார்கள் என்று, இந்த மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் உ.பி. சபாநாயகர் சதீஷ் மஹானா.