இன்று (ஆகஸ்ட் 26) நாடு திரும்பிய இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலா பயணி கோபிசந்த் தொட்டகுராவுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் அமோஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸுக்குச் சொந்தமானது. இதன் `நியூ ஷெப்பர்ட்-25’ விண்கலத்தில் விண்வெளிக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டார் இந்தியாவைச் சேர்ந்த கோபிசந்த் தொட்டகுரா. இந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்கிற பெருமைப் பெற்றுள்ளார் கோபிசந்த்.
30 வயதான கோபிசந்த் தொட்டகுரா ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் அட்லாண்டாவில் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் 25-வது பயணத்தில் விண்வெளிக்குப் பயணித்த 6 நபர்களில் கோபிசந்தும் ஒருவர்.
இதை அடுத்து இன்று இந்தியா திரும்பிய கோபிசந்த் தில்லி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், `இதற்காகத்தான் இத்தனை நாட்களாக நான் காத்துக்கொண்டிருந்தேன். நாடு திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது இந்தியாவுக்கு பெருமையான ஒரு தருணம். என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். எல்லோரும் விண்வெளிக்குச் சென்று ஏதாவது ஒன்றைச் செய்யலாம்’ என்றார்.
1984-ல் முன்னாள் இந்திய விமானப்படை விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அன்றைய சோவியத் யூனியனில் இருந்து சோயூஸ் T-11 விண்கலத்தில் அந்நாட்டைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குப் பயணித்தார் ராகேஷ் ஷர்மா.
ராகேஷ் ஷர்மாவைத் தொடர்ந்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார் கோபிசந்த்.