
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டம் டிசம்பரில் மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்வதற்காக ஜெர்மனியின் டியூவி-எஸ்யூடியுடன் இந்திய ரயில்வே கைக்கோர்த்துள்ளது.
ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டத்தை வரும் டிசம்பருக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதைச் செயல்படுத்தப்படும் பட்சத்தில் உலகளவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயக்கப்படும் ரயில் சேவையைக் கொண்ட 5-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
மலைப் பாதைகளில் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்படுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு ரயிலைத் தயாரிக்க ரூ. 80 கோடி செலவாகிறது. முதற்கட்டமாக மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக 17-வது மக்களவையின் இந்திய ரயில்வேவுக்கான நிலைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும், தலா ரூ. 10 கோடி செலவில் ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் 5 பராமரிப்பு வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் ரயில் இணைப்புப் பணிகள் சென்னை ஐசிஎஃப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயிலானது நீலகிரி மலை ரயில்வேயிலும் இணைக்கப்படும். முதற்கட்டமாக ஹரியானாவில் வடக்கு ரயில்வேயின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இது இயக்கப்படவுள்ளது.