
பண்டிகை காலங்களுக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவுகளை எளிதாக்குவதற்கு, தள்ளுபடி கட்டணங்களுடன் கூடிய சோதனை அடிப்படையிலான `இரு வழிப் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தை’ மத்திய ரயில்வே அமைச்சகம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகம் ஒரு வெளியிட்ட அறிக்கையில், ``கூட்டத்தை தவிர்க்கவும், தொந்தரவு இல்லாத முன்பதிவை உறுதி செய்யவும், ரயில் பயணத்தை எளிதாக்கவும், சிறப்பு ரயில்கள் உள்பட ரயில்களின் பயன்பாட்டை இருபுறமும் அதிகரிக்கவும், தள்ளுபடி கட்டணத்தில் `இரு வழிப் பயணச்சீட்டு முன்பதிவு திட்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
திட்டம் எப்படி செயல்படும்?
இந்த திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 14 அன்று தொடங்குகிறது. இதன்படி, அக்டோபர் 13 அன்று பயணிக்க வரும் ஆகஸ்ட் 14 அன்று பயணச்சீட்டை முன்பதிவு செய்யவேண்டும்.
அந்த வகையில், பண்டிகை காலங்களில் ஊர்களுக்குச் செல்ல அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26 வரையிலான பயண தேதிகளுக்கு முதலில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யவேண்டும்.
அதன்பிறகு, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரையிலான தேதிகளுக்கான `ரிட்டன் டிக்கெட்டுகளை’ இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி உடனடியாக முன்பதிவு செய்யலாம்.
பொதுவாகவே இரு மாதங்களுக்கு முன்பு ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யவேண்டும் என்கிற நடைமுறை `ரிட்டன் டிக்கெட் முன்பதிவிற்குப்’ பொருந்தாது.
இதனால் அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26-ம் தேதி வரையிலான பயணங்களுக்கான ரயில் பயணச்சீட்டுகளின் முன்பதிவின்போதே, ரிட்டன் டிக்கெட்டுகளையும் சேர்த்து முன்பதிவு செய்ய முடியும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டத்தின் கீழ் ரிட்டன் டிக்கெட்டுக்கான அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே 20% தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படமாட்டாது.
இந்த திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளில், பயண தேதிகள் உள்பட எந்த மாற்றமும் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.
திட்டத்தின் நோக்கம்
இரு வழிப் பயணங்களில் ரயில்களின் பயன்பாட்டை அதிகரிப்பதையும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ரிட்டன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்குப் பயனளிப்பதையும், இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.