

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்குவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத் தொகையாக நடப்பு ஆண்டில் ரூ. 1,866 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ், உற்பத்திசார் ஊக்கத் தொகை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து முடிவு, பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டு வந்த அதே அளவான 78 நாள் போனஸ் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்ற ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரயில்வே கார்டுகள், ரயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 10.9 லட்சம் ஊழியர்களுக்கு ரூ. 1,866 கோடி போனஸாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை துர்கா பூஜையும், அக்டோபர் 2 அன்று தசரா பண்டிகையும், அக்டோபர் 20 அன்று தீபாவளியும் கொண்டாடப்படும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.