
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பலில், 240 நாட்களில் உலகை சுற்றி வரும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் இந்திய கடற்படையின் இரு பெண் அதிகாரிகள்.
லெப்டினன்ட் கமாண்டர்கள் தில்னா மற்றும் ரூபா இந்திய கடற்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும், கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பலில், சுமார் 23,000 நாட்டிகல் மைல் (42596 கி.மீ) தூரத்தை 240 நாட்களில் கடந்து உலகை சுற்றி வரும் பயணத்தை நேற்று (அக்.2) கோவாவில் உள்ள இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ். மாண்டோவியில் தொடங்கினார்கள்.
`நவிகா சாகர் பரிக்ரமா’ என்று அழைக்கப்படும் பெண் கடற்படை அதிகாரிகள் மட்டுமே உலகை சுற்றிவரும் நோக்கில் பயணிக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 6 பெண் அதிகாரிகள் 10 செப்டம்பர் 2017-ல் தொடங்கி, 21 மே 2018 வரை இதே ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பலில் பயணித்து 254 நாட்களில் உலகைச் சுற்றி வந்தனர்.
லெப்டினட் கமாண்டர்கள் தில்னா மற்றும் ரூபா பயணிக்கும் நவிகா சாகர் பரிக்ரமா திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணத்தைத்தான் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி நேற்று தொடங்கிவைத்தார். இந்த இரு பெண் அதிகாரிகளும் சுமார் 3 ஆண்டுகள் இத்திட்டத்துக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
18 பிப்ரவரி 2017-ல் இந்திய கடற்படையில் செயல்பாட்டுக்கு வந்தது ஐ.என்.எஸ்.வி தாரிணி கப்பல். இந்தக் கப்பலில் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல அதிநவீன வசதிகள் உள்ளன.