நேற்று (ஆகஸ்ட் 27) மஹாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்கோட் கோட்டையில் இருந்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை முன்வைத்து மஹாராஷ்டிர மாநில அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வரும் வேளையில், சிவாஜி சிலையை நிறுவியது இந்திய கடற்படை என்று விளக்கமளித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ல் இந்திய கடற்படை தினத்தை ஒட்டி, மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நேற்று மாலை இந்த சிலை விழுந்து நொறுங்கியது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மஹாராஷ்டிர மாநில அரசு மீது அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். இதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:
`இந்த நிகழ்வு துரதிஷ்டவசமானது. சிலையை இந்திய கடற்படை நிறுவியது. அவர்கள்தான் அதை வடிவமைத்தார்கள். ஆனால் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் சிலை விழுந்து நொறுங்கியுள்ளது. நாளை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் அங்கே சென்று இந்த விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வார்கள்’ என்றார்.
விழுந்து நொறுங்கிய சிலையைத் தயாரித்த ஒப்பந்ததாரர் ஜெயதீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேடன் பாட்டீல் ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 3(5), 109, 110, 125, 318 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.