64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்து உலக சாதனை: தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்து உலக சாதனை: தலைமைத் தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தலில் 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்து உலக சாதனை படைத்துள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

"மக்களவைத் தேர்தலில் 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்ததன் மூலம் நாம் உலக சாதனை படைத்துள்ளோம். ஜி7 நாடுகளிலுள்ள வாக்காளர்களைக் காட்டிலும் இது 1.5 மடங்கு அதிகம். ஐரோப்பிய யூனியனிலுள்ள வாக்காளர்களைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகம்.

தேர்தல் அதிகாரிகளின் மிக நுணுக்கமான பணிகளால் மறுவாக்குப்பதிவின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளோம். 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 25 மறுவாக்குப்பதிவு இரு மாநிலங்களில் மட்டுமே நடந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வன்முறையைக் காணாத பொதுத்தேர்தல்களில் இதுவும் ஒன்று. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கான உழைப்பு தேவை.

இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 10,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2019-ஐ காட்டிலும் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம் இது. களத்திலுள்ளவர்களுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறையை விரைவில் தொடங்கவுள்ளோம்.

ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை நடைமுறையும் முற்றிலும் வலுவானது. மிகத் துல்லியமாக செயல்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in