
கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்றுகொண்டிருந்த லைபீரிய சரக்கு கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து கடலோரக் காவல்படை மீட்டுள்ளது.
லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பலான எம்எஸ்சி எல்சா 3 இன்று (மே 25) காலை 7.50 மணியளவில் கொச்சி கடற்கரை பகுதியில் மூழ்கியபோதும், அதில் இருந்த 24 பணியாளர்களில், 21 பேரை இந்திய கடலோர காவல்படையும், 3 பேரை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலும் மீட்டது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`640 கொள்கலன்களுடன் எம்எஸ்சி எல்சா 3 கப்பல் மூழ்கியது. அவற்றில் 13 ஆபத்தான சரக்குக் கொள்கலன்களும், 12 கால்சியம் கார்பைடு கொள்கலன்களும் இருந்தன. மேலும் அதில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (furnacer oil) ஆகியவையும் ஏற்றப்பட்டிருந்தன.
மே 24 அன்று, கேரளத்தின் விழிஞத்திலிருந்து கொச்சிக்குச் செல்லும் வழியில் எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பல் மூழ்கத் தொடங்கி இருந்தது. உலகளாவிய தேடல் மற்றும் மீட்பு நெறிமுறைகளின்படி, இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் எம்வி ஹான் யி மற்றும் எம்எஸ்சி சில்வர் 2 வணிகக் கப்பல்கள் ஆகியவையும் உதவிக்காகத் திருப்பிவிடப்பட்டன.
மாலைநேரத்தின் பிற்பகுதியில் ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாட்டவர் உள்பட கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்பு ஏற்பாடுகளுக்கு உதவ மூன்று மூத்தப் பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்தனர். இருப்பினும், கப்பலின் நிலை இரவு முழுவதும் மோசமடைந்து, மே 25, 2025 அன்று அது கவிழ்ந்தது.
இதனால் மூன்று பணியாளர்களும் கப்பலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் ஐ.என்.எஸ். சுஜாதா அவர்களை மீட்டது. இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.