
சீனாவுடனான சர்வதேச எல்லைப் பகுதியில் தென்பட்ட சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை, இது தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 4,056 கி.மீ. அளவுக்கு சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த சர்வதேச எல்லையின் கிழக்குப் பகுதியில் சுமார் 55,000 அடி உயரத்தில் சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் தென்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஹசிமாரா பகுதியில் உள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான தளத்தில் இருக்கும் ரஃபேல் போர் விமானத்தைப் பயன்படுத்தி சீனாவின் உளவு பலுனை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இது தொடர்பாக நேற்று (அக்.07) செய்தி வெளியிட்டது `தி டிரிப்யூன்’ இணைய செய்தி நிறுவனம்.
அத்துடன் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே, வங்காள விரிகுடாவிலும் ஒரு சீன உளவு பலூன் தென்பட்டுள்ளது. ஆனால் இந்த பலூன் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் தாக்கி அழிக்கப்படவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகளுடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் தி டிரிப்யூனில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 4-ல் சுமார் 58,000 அடி உயரத்தில் அமெரிக்க வான் எல்லையில் பறந்து சென்ற சீன உளவு பலூனை அமெரிக்க விமானப்படையின் எப்-22 ரேப்டர் ரக விமானம் ஏவுகணையை வீசி நடுவானில் தாக்கி அழித்தது.