அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் பணியாற்றுவோம்: ஜெய்சங்கர்

பொதுவாக பிறருடைய தேர்தல்கள் குறித்து நாம் கருத்து தெரிவிப்பதில்லை ஏனென்றால் நம் தேர்தல்கள் குறித்து பிறர் கருத்து தெரிவிப்பதை நாம் விரும்புவதில்லை
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் பணியாற்றுவோம்: ஜெய்சங்கர்
1 min read

`அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவருடன் இணைந்து பணியாற்ற இந்திய அரசு தயார்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய மத்தியமைச்சர் ஜெய்சங்கர், `அமெரிக்கா அதன் முடிவுகளை வழங்கும். அமைவது யாருடைய அரசாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது’ என்றார்.

`பொதுவாக பிறருடைய தேர்தல்கள் குறித்து நாம் கருத்து தெரிவிப்பதில்லை ஏனென்றால் நம் தேர்தல்கள் குறித்து பிறர் கருத்து தெரிவிப்பதை நாம் விரும்புவதில்லை. ஆனால் அமெரிக்கா அதன் முடிவுகளை வழங்கும். நான் இதை பேச்சுக்காகக் கூறவில்லை,

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்துள்ளதை நீங்கள் பார்க்கலாம், யார் அமெரிக்காவின் அதிபராகத் தேர்வானாலும் அவருடன் இணைந்து பணியாற்ற இந்தியாவால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று இந்த நிகழ்வில் பேசினார் ஜெய்சங்கர்.

சமகால உலகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, `நான் நேர்மறையான எண்ணத்தை உடையவன். தீர்வுகளில் இருந்து உருவாகும் பிரச்னைகளைவிட, பிரச்னைகளிலிருந்து உருவாகும் தீர்வுகளை பற்றி நான் எப்போதும் யோசிப்பேன். ஆனால் தற்போது மிகவும் கடினமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அடுத்து ஐந்து வருடங்களுக்கு என்ன நடக்கும் என்பதை இப்போது கணிப்பது மிகவும் கடினம்’ என்றார் ஜெய்சங்கர்.

மேலும், `பருவநிலை மாற்றம் என்பதை இனி வெறும் செய்தியாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது. அதனால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன’ என்று பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in