
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் `தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள மத்திய அரசு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக மத்திய அரசு இன்று (ஜூலை 18) கூறியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
`பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கோருவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை அமல்படுத்தவும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் நடவடிக்கையாகவும் இது இருப்பதாக’ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதிலும் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் முக்கியமான நடவடிக்கையாக, மிகச் சரியான நேரத்தில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (பயங்கரவாத அமைப்பாக) அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வரவேற்ற மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், `இந்தியா-அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக வெளிப்படுத்திய நடவடிக்கை’ என்று குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பேற்றது.
இதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது.