கண்களைப் பாதிக்கும் பாக்டீரியா தொற்று நோயான டிராக்கோமாவை இந்தியா முற்றிலும் ஒழித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
டிராக்கோமா என்பது கண்களைப் பாதிக்கும் ஒரு வகையான பாக்டீரியா தொற்று நோயாகும். டிராக்கோமா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும். அத்துடன், டிராக்கோமா நோய் ஒருவரிடமிருந்து பிறருக்குப் பரவும் தன்மையுடையது.
உலகளவில் 15 கோடி மக்கள் டிராக்கோமா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60 லட்சம் மக்கள் பார்வையிழந்துள்ளனர். சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வாழும் பொதுமக்களையே இந்த நோய் தாக்கிறது. 1950-களில் இந்திய மக்களின் பார்வை இழப்பு பிரச்னைக்கு முக்கிய காரணியாக டிராக்கோமா இருந்தது.
1963-ல் முதல்முறையாக மத்திய அரசால் `தேசிய டிராக்கோமா கட்டுப்பாடு திட்டம்’ அறிமுகப்பட்டது. இதை அடுத்து 1970-களில் டிராக்கோமாவால் ஏற்படும் பார்வை இழப்பு இந்தியாவில் 5 சதவீதமாக குறைந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல முயற்சிகளால் 2024-ல் இந்திய மக்களிடையே டிராக்கோமா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இதற்கான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ், `லட்சக்கணக்கான மக்களை முன்பு பலவீனப்படுத்திய நோயான டிராக்கோமாவை இந்தியா முற்றிலுமாக ஒழித்துள்ளது. இதை சாத்தியப்படுத்தியதற்குக் காரணமான சுகாதாரப் பணியாளர்கள், இந்திய அரசு, பொதுமக்கள், பங்குதாரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்றார்.